நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

| |

சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் வழங்கி வரும் ஆயுத உதவிகளை நிறுத்தக்கோரியும் தமிழீழ மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கோரியும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் முன்பாக நேற்று கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது.

நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் 3:00 மணி வரை இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.





கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்,

- சிறிலங்காவின் தமிழின அழிப்பினை நிறுத்து

- சிறிலங்கா அதிகார பீடத்திற்கான உதவி தமிழின அழிப்பிற்கு உடந்தையாக இருப்பதற்கு ஒப்பானது

- சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்து

- சிறிலங்கா இன அழிப்பு அரசுக்கு ஆதரவாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாதே

போன்ற முழக்கங்களை எழுப்பியதோடு, பதாகைகளையும் தாங்கி நின்றனர்.

அத்தோடு, தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் கோரிக்கை மனு ஒன்றும் தூதரகத்திடம் வழங்கப்பட்டது.



அம்மனுவில்,

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு மையத்தில் (UN Security Council) தமிழீழ மக்களின் நிலைமை தொடர்பான விவாதங்களை சீனா புறக்கணிக்காது ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அனைத்துலக மனித நேய உதவி நிறுவனங்களை வன்னிக்குள் அனுமதிக்கப்படுவதற்குரிய அழுத்தங்களை சிறிலங்காவிற்கு கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகள் உள்ளடங்கலாக சமகால நிலைமைகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இதேவேளையில் நோர்வேயில் உள்ள ரஸ்யத் தூதரகம் முன்பாக நாளை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Drammens veien 74, 0244 Oslo என்ற முகவரியில் அமைந்துள்ள ரஸ்யத் தூதரகம் முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

Posted by எல்லாளன் on 9:18 AM. Filed under . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response