உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்காவில் காவல்துறையினர்
திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்காவில் காவல்துறையினர் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியீட்டியுள்ளனர்.
வெகுவிரைவில் முழுமையாக வெற்றி பெறுவார்கள் என்பது தான் அங்குள்ள உண்மை நிலவரம்.
தென்தமிழீழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த வர்ஷா எனப்படும் சிறுமி இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பணயத்தொகையாக கோடிக் கணக்கான ரூபாய்களை கடத்தல்காரர்கள் கேட்டதும் அது வரத்தாமதாமாகியதால் அந்த அப்பாவிக் குழந்தை கொலைசெய்யப்பட்டதும் யாவரும் அறிந்த சம்பவம்.
அந்த நிகழ்வு வெளிநாடுகளில் மிகவும் பிரபல்யமாக வெளிச்சத்திற்கு வந்தவுடன் அதனை மூடிமறைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய ஸ்ரீலங்கா அரசு குற்றவாளிகள் என சிலரை கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியது.
காலப்போக்கில் ஸ்ரீலங்காவின் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளின் கையாட்கள் என்பது தெரிந்ததும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்தது போல் ஸ்ரீலங்கா அரசு செய்வதறியாது தடுமாறியது.
எங்கே அரச பயங்கரவாதத்தின் இன்னுமொரு வடிவம் வெளியே வந்துவிடப் போகின்றது என்பதை உணர்ந்தகொண்ட அரச மேல்மட்ட அதிகாரிகள் காதும் காதும் வைத்தாற்போல் அடுத்தகட்ட நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அதுதான் மேற்படி கொலையில் ஈடுபட்டவர்கள் எனக் காவல்துறையினால் கைது செய்யப்பட்டவர்கள் “என்கவுண்டர்” முறையெனக் கூறி காவல் துறையினரே அவர்களைச் சுட்டுக் கொலைசெய்து கொலைக்கான தடயங்களை இல்லாமல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் மேற்படி கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எனக் கைதுசெய்யப்பட்டு உண்மைக் குற்றவாளிகளின் தூண்டுதலின்பேரில் காவல் துறையினரால் கொலை செய்யப்படுபவர்கள் வெறும் அம்புகளேதான்.
எய்தவர்களான உண்மைக் குற்றவாளிகள் மறைந்துகொண்டு அரச பயங்கரவாதத்திற்க துணைபோகும் ஒட்டுக்குழுக்களாகவும் அரச படையினராகவும் அரசிற்கு முண்டுகொடுக்கும் கைக்கூலிகளாகவும் தற்போது பாதுகாப்பாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
முதலில் இறந்த குற்றவாளி சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கதை கட்டப்பட்டது. அது பொய். அவர் சயனைட் அருந்தி சாகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.
சயனைட் சாப்பிட்டு அவர் இறந்தால் அவர் குடும்பத்தினருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் தவறுமிடத்து அவர் என்கவுண்டர் முறையில் சகாடிக்கப்படுவதுடன் அவரது குடும்பத்தினரும் வஞ்சம் தீர்க்கப்படுவார்கள் என அரசபடைகளினால் எச்சரிக்கை செய்யப்பட்டார்.
அதனாலேயே அவரை ஆயுதம் புதைத்து வைத்திருக்கும் இடத்தைக் காட்டுவதாகவும் அங்கு அவர் சயனைட்டை சாப்பிட்டு இறந்ததாகவும் சிறந்த நாடகத்தை காவல்துறையினர் அரங்கேற்றியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஏனைய இருவர் நேற்றைய முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
எங்கே உண்மைக் குற்றவாளிகளின் பெயர்களும் முகங்களும் அம்பலத்திற்கு வந்துவிடுமோ என்று எண்ணிய ஸ்ரீலங்கா அரசு வழக்கின் முக்கிய சாட்சிகளை படுபொய்யான தகவல்களை வெளியில் கூறிவிட்டு அவர்களிடமிருந்து வரவேண்டிய உண்மையாயன தகவல்களை மூடிமறைப்பதில் எங்கே தவறிவிடுவோமோ என எண்ணி அவர்களின் வாய்களை மூடுவதைவிட அவர்களை இல்லாமல் செய்துவிடும் செயல் இன்று அரச படைகளுக்கும் காவல்துறையினருக்கும் இலகுவாக இருந்ததினால் அந்த கபட நாடகத்தை அரங்கேற்றி இன்று அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது ஸ்ரீலங்கா அரசு.
மேற்படி வழக்கில் மீதமாக உள்ளவர்களும் எதிர்காலத்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொலைசெய்யப்படுவார்கள். அல்லது தப்பி ஓடி தலைமறைவாகி வேற்று நாடுகளுக்கு சென்று தலைமறைவாக உல்லாச வாழ்க்கை வாழ்வார்கள்.
இதற்கும் ஓர் பொய்யான தகவலை சோடித்து வெளியுலகை ஏமாற்றிக்கொள்ள முனையும் ஸ்ரீலங்கா அரசு. இதற்கு ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாத அமைச்சர்கள் துணை போவார்கள்.
எத்தனை காலம் தான் தீக்கோழி தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு தன்னை யாரும் காணவில்லை என்று நினைத்துக்கொள்ளும் ஸ்ரீலங்காவின் அரச பயங்கவாத நாடகங்களோ தெரியவில்லை.







