வவுனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கனடிய குடிமகனுடன் கனடிய வெளிவிவகாரச் செயலாளர் சந்திப்பு

Posted on 10:00 PM by எல்லாளன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் பின்னர் சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த குடிமகன் ஒருவர் வவுனியாவில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கனடாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டு ஞாயிற்றுக்கிழமை கொழும்பை வந்தடைந்த கனடாவின் வெளிவிவகாரச் செயலாளரான தீபக் ஒப்ரி, குறிப்பிட்ட கனடிய குடிமகன் வவுனியாவில் உள்ள முகாம் ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், அவரை ஒரு போராளி என சிறிலங்கா அதிகாரிகள் குறிப்பிடுவதாகவும் தெரிவித்தார்.

"தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடிய குடிமகன் யார் என்பதை சிறிலங்கா அதிகாரிகள் எனக்குத் தெரிவித்தார்கள். அவரின் அடையாளம் எமக்குத் தெரியும். போராளிகளுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ள முகாமிலேயே அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்" எனவும் கனடிய வெளிவிவகாரச் செயலாளர் குறிப்பிட்டிருக்கின்றார்.

வெளிநாட்டு குடிமக்கள் ஆறு பேர் இந்த இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக சிறிலங்கா அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். இதில் மூவர் அவுஸ்திரேலிய குடிமக்கள் மற்றவர்கள் பிரித்தானியா, நோர்வே மற்றும் நெதர்லாந்து குடிமக்கள் ஆவர்.

இருந்தபோதிலும், இந்த முகாம்களில் கனடிய நாட்டு குடிமக்கள் நால்வரும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக ரொறன்ரோவில் சட்டத்தரணி ஒருவர் நேற்று தெரிவித்திருக்கின்றார்.

ரொறன்ரோவில் உள்ள சட்டத்தரணியான ஹரி ஆனந்தசங்கரி இது தொடர்பாகத் தெரிவிக்கையில், இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனடிய குடிமகன் ஒருவரின் குடும்பத்துக்கு தான் உதவுவதாகவும், ஆனால் இதேபோல மேலும் மூவர் அங்கிருப்பதையிட்டு தனக்குத் தெரியும் எனவும் குறிப்பிட்டார்.

தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் யாராவது போராளிகளா என்பதையிட்டுத் தனக்குத் தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், எப்படி இருந்தாலும் அவர்கள் கனடிய தூதரகத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமையைக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் குறிப்பிட்டார்.

இதேவேளையில், கனடா நாட்டு குடிமக்கள் இருவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதையிட்டு இதுவரையில் தனக்குத் தகவல் கிடைத்திருப்பதாக குறிப்பிடும் கனடிய வெளிவிவகாரச் செயலாளர், இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களுக்கு தான் நேற்றைய நாள் சென்றிருந்த போது இரண்டாவது கனடிய குடிமகனைச் சந்தித்ததாகவும் குறிப்பிட்டார்.

"அவருடன் நாம் பேசினோம். இப்போது அவர் எமது தூதரக ஆலோசனைப் பிரிவு அதிகாரிகளின் தொடர்பில் உள்ளார். அவரை விடுவித்து கனடாவுக்குத் திருப்பிக்கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் நாம் இப்போது ஈடுபட்டுள்ளோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

திங்கட்கிழமை கனடிய தூதரக அதிகாரிகளுடன் வவுனியாவில் உள்ள முகாம்களுக்குப் பயணம் செய்த இவர் முகாம் நிலைமைகள் தொடர்பாகப் பார்வையிட்டார். முகாம்களினதும், இடம்பெயர்ந்த மக்களினதும் தேவைகளை நிறைவேற்றும் வகையில் கனடா வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பாகவும் அவர் அதிகாரிகளுடன் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவையும் சந்தித்த இவர்கள் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் உட்பட பல்வேறு அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளார்.

இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு கனடாவின் உதவியை அமைச்சர் ரோகித போகல்லாகம இந்தச் சந்திப்பின் போது கோரியதாகவும் தெரிகின்றது.

கடந்த மாதத்திலேயே சிறிலங்காவுக்கு பயணம் செய்வதற்கு தீபக் ஒப்ரி திட்டமிட்டிருந்த போதிலும் சிறிலங்கா அதிகாரிகள் அப்போது அவருக்கான விசா விண்ணப்பத்தை நிராகரித்திருந்தார்கள்.

No Response to "வவுனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கனடிய குடிமகனுடன் கனடிய வெளிவிவகாரச் செயலாளர் சந்திப்பு"