அமெரிக்கர்கள் புலிகளுக்கு தார்மீக ஆதரவு வழங்குவதைத் தடுக்கும் சட்டம் அந்நாட்டு உச்ச நீதிமன்ற விசாரணையில்

| |


தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புக்கள் என வரையறுக்கப்பட்ட இயக்கங்களுக்கு அமெரிக்கக் குடிமக்கள் தார்மீக ஆதரவு வழங்குவதைத் தடை செய்யும் சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து விசாரணை செய்வதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் தயாராகி உள்ளது.

அமெரிக்க நாட்டுப்பற்றுச் சட்டம் என்ற இந்தச் சட்டம் வாசிங்ரன் அரசுக்கு பரந்தளவிலான அதிகாரங்களை அள்ளி வழங்குவதாக மனித உரிமை அமைப்புக்கள் கண்டனம் தெரிவிக்கின்றன.

இந்தச் சட்டத்தை எதிர்த்து லொஸ் ஏஞ்சல்ஸ் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனித உரிமை அமைப்பு ஒன்று தாக்கல் செய்த வழக்கில், "சட்டம் அமெரிக்க அரசியலமைப்புக்கு மாறாக, தெளிவற்றதாக இருக்கின்றது" எனத் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக அமெரிக்க அரசு உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளது. அரசின் மனுவை ஏற்றுக்கொண்டுள்ள உச்ச நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை மீளாய்வு செய்ய இணங்கி உள்ளது. விசாரணைகளை அடுத்த ஆண்டு முற்பகுதியில் நடத்துவது என்றும் தீர்மானித்துள்ளது.

அமெரிக்க நாட்டுப்பற்றுச் சட்டம் 1996 ஆம் ஆண்டில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் ஜோர்ஜ் புஷ் அரச தலைவராக இருந்தபோது அதற்கு ஆதரவளித்தார். 2001 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 11 ஆம் நாள் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலின் பின்னர் அமெரிக்க காங்கிரஸ் இந்தச் சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.

2004 ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்யப்பட்டன.

இந்தச் சட்டம் குறித்த விவாதங்களையே உச்ச நீதிமன்றம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கேட்க உள்ளது. அடுத்த ஜூன் மாதம் அளவில் அதன் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டம் குறித்து கவனம் செலுத்துவது இதுவே முதல் தடவையாகும். வெளிநாட்டுத் தீவிரவாத இயக்கங்கள் என வரையறுக்கப்பட்ட அமைப்புகளுக்கு எந்த ஒரு உதவியையும், சேவையையும் அமெரிக்கக் குடிமக்கள் வழங்குவதைத் தடை செய்கின்றது. பயிற்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள் அல்லது உதவிகள் என எதுவாக இருப்பினும் அவை இந்தச் சட்டத்தின் கீழ் குற்றங்களே.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்டுகள் வரையான சிறைத் தண்டனை வழங்கப்பட முடியும். இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு நபர் தீவிரவாதச் செயல்களிலோ வன்முறையிலோ ஈடுபடுவதற்கான உள்நோக்கங்களைக் கொண்டிருந்தார் என்று நிரூபிப்பதற்கான வேறு ஆதாரங்கள் வழங்கப்படத் தேவையில்லை.

தீவிரவாத அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்தார் அல்லது அதற்கு உதவிகளைச் செய்தார் என நிரூபித்தால் மட்டும் போதுமானது.

"அமெரிக்காவில் உள்ள மனித உரிமை அமைப்புக்கள் மனித உரிமைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கினால் இந்தச் சட்டத்தின் கீழ் அவை குற்றவாளிகளாக்கப்பட முடியும்" எனத் தெரிவித்தார் டேவிட் கோல். இவர் ஜோர்ஜ் டவுண் பல்கலைக்கழத்தின் சட்டத்துறை பேராசிரியர். அத்துடன், இந்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களின் தலைமைச் சட்டவாளரும் இவரே.

"பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வன்முறைகளற்ற முறைகளின் மூலம் உதவுபவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்வதன் மூலம் நமது நாட்டைப் பாதுகாக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. தீவிரவாதம் எது உதவிகள் எவை என்பதை அமெரிக்க காங்கிரஸ் திட்டவட்டமாக வரையறுக்க வேண்டும். ஆனால் அது செய்யப்படவில்லை" என்றார் அவர்.

ஆனால், வெளிநாட்டுத் தீவிரவாதத்திற்கு எதிராக நாடு நடத்திவரும் போராட்டத்தின் ஒரு பகுதியே இந்தச் சட்டம் என அமெரிக்க அரச தனது உச்ச நீதிமன்ற மனுவில் தெரிவித்துள்ளது.

2001 ஆம் ஆண்டில் இருந்து தீவிரவாத அமைப்புக்களுக்கு பொருள் உதவிகளை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் 120 பேருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றில் அரைவாசிப் பேருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது என நீதித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இந்தச் சட்டம் அரசியலமைப்புக்கு மாறானது என்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியவர்கள் விடுதலைப் புலிகள் மற்றும் குர்திஷ் பணியாளர்கள் கட்சி ஆகியவற்றிற்கு ஆதரவளிக்க விரும்பும் அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் தனிநபர்களுமே என்று 'ரொய்ட்டர்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Posted by எல்லாளன் on 8:21 PM. Filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response