உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்காவில் காவல்துறையினர்

திருகோணமலை சிறுமி வர்ஷா கொலையில் சம்பந்தப்பட்ட உண்மைக் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் சிறிலங்காவில் காவல்துறையினர் மூன்றில் இரண்டு பங்கு வெற்றியீட்டியுள்ளனர்.

வெகுவிரைவில் முழுமையாக வெற்றி பெறுவார்கள் என்பது தான் அங்குள்ள உண்மை நிலவரம்.

தென்தமிழீழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த வர்ஷா எனப்படும் சிறுமி இனம்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் இருந்து பணயத்தொகையாக கோடிக் கணக்கான ரூபாய்களை கடத்தல்காரர்கள் கேட்டதும் அது வரத்தாமதாமாகியதால் அந்த அப்பாவிக் குழந்தை கொலைசெய்யப்பட்டதும் யாவரும் அறிந்த சம்பவம்.

அந்த நிகழ்வு வெளிநாடுகளில் மிகவும் பிரபல்யமாக வெளிச்சத்திற்கு வந்தவுடன் அதனை மூடிமறைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய ஸ்ரீலங்கா அரசு குற்றவாளிகள் என சிலரை கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியது.

காலப்போக்கில் ஸ்ரீலங்காவின் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகளின் கையாட்கள் என்பது தெரிந்ததும் கொள்ளிக்கட்டையை எடுத்துத் தலையைச் சொறிந்தது போல் ஸ்ரீலங்கா அரசு செய்வதறியாது தடுமாறியது.

எங்கே அரச பயங்கரவாதத்தின் இன்னுமொரு வடிவம் வெளியே வந்துவிடப் போகின்றது என்பதை உணர்ந்தகொண்ட அரச மேல்மட்ட அதிகாரிகள் காதும் காதும் வைத்தாற்போல் அடுத்தகட்ட நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

அதுதான் மேற்படி கொலையில் ஈடுபட்டவர்கள் எனக் காவல்துறையினால் கைது செய்யப்பட்டவர்கள் “என்கவுண்டர்” முறையெனக் கூறி காவல் துறையினரே அவர்களைச் சுட்டுக் கொலைசெய்து கொலைக்கான தடயங்களை இல்லாமல் செய்வதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மேற்படி கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் எனக் கைதுசெய்யப்பட்டு உண்மைக் குற்றவாளிகளின் தூண்டுதலின்பேரில் காவல் துறையினரால் கொலை செய்யப்படுபவர்கள் வெறும் அம்புகளேதான்.

எய்தவர்களான உண்மைக் குற்றவாளிகள் மறைந்துகொண்டு அரச பயங்கரவாதத்திற்க துணைபோகும் ஒட்டுக்குழுக்களாகவும் அரச படையினராகவும் அரசிற்கு முண்டுகொடுக்கும் கைக்கூலிகளாகவும் தற்போது பாதுகாப்பாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

முதலில் இறந்த குற்றவாளி சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக கதை கட்டப்பட்டது. அது பொய். அவர் சயனைட் அருந்தி சாகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.

சயனைட் சாப்பிட்டு அவர் இறந்தால் அவர் குடும்பத்தினருக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்றும் தவறுமிடத்து அவர் என்கவுண்டர் முறையில் சகாடிக்கப்படுவதுடன் அவரது குடும்பத்தினரும் வஞ்சம் தீர்க்கப்படுவார்கள் என அரசபடைகளினால் எச்சரிக்கை செய்யப்பட்டார்.

அதனாலேயே அவரை ஆயுதம் புதைத்து வைத்திருக்கும் இடத்தைக் காட்டுவதாகவும் அங்கு அவர் சயனைட்டை சாப்பிட்டு இறந்ததாகவும் சிறந்த நாடகத்தை காவல்துறையினர் அரங்கேற்றியுள்ளனர். அதன் தொடர்ச்சியாக ஏனைய இருவர் நேற்றைய முன்தினம் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.

எங்கே உண்மைக் குற்றவாளிகளின் பெயர்களும் முகங்களும் அம்பலத்திற்கு வந்துவிடுமோ என்று எண்ணிய ஸ்ரீலங்கா அரசு வழக்கின் முக்கிய சாட்சிகளை படுபொய்யான தகவல்களை வெளியில் கூறிவிட்டு அவர்களிடமிருந்து வரவேண்டிய உண்மையாயன தகவல்களை மூடிமறைப்பதில் எங்கே தவறிவிடுவோமோ என எண்ணி அவர்களின் வாய்களை மூடுவதைவிட அவர்களை இல்லாமல் செய்துவிடும் செயல் இன்று அரச படைகளுக்கும் காவல்துறையினருக்கும் இலகுவாக இருந்ததினால் அந்த கபட நாடகத்தை அரங்கேற்றி இன்று அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது ஸ்ரீலங்கா அரசு.

மேற்படி வழக்கில் மீதமாக உள்ளவர்களும் எதிர்காலத்தில் காவல்துறையினரால் சுட்டுக்கொலைசெய்யப்படுவார்கள். அல்லது தப்பி ஓடி தலைமறைவாகி வேற்று நாடுகளுக்கு சென்று தலைமறைவாக உல்லாச வாழ்க்கை வாழ்வார்கள்.

இதற்கும் ஓர் பொய்யான தகவலை சோடித்து வெளியுலகை ஏமாற்றிக்கொள்ள முனையும் ஸ்ரீலங்கா அரசு. இதற்கு ஸ்ரீலங்காவின் அரச பயங்கரவாத அமைச்சர்கள் துணை போவார்கள்.

எத்தனை காலம் தான் தீக்கோழி தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு தன்னை யாரும் காணவில்லை என்று நினைத்துக்கொள்ளும் ஸ்ரீலங்காவின் அரச பயங்கவாத நாடகங்களோ தெரியவில்லை.

| | Read More »

கடுமையாக போராடும் விடுதலைப்புலிகள்: விரக்தியில் விளிம்பில் சிறிலங்கா இராணுவம்

இராணுவத்தின் முன்னேற்றத்ததை தடுத்து விடாப்பிடியுடன் விடுதலைப் புலிகள் கடுமையாக போராடி வருவதால், நகர முடியாமல் சிறிலங்கா இராணுவத்தினர் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும். இலங்கை முழுவதும் சுதந்திர பூமியாகி விடும். பிரபாகரன் அழிக்கப்பட்டு விடுவார். உயிர் தப்ப அவர் சரணடைவதுதான் புத்திசாலித்தனம் என அதிபர் ராஜபக்ச முழக்கமிட்டு 2 மாதங்களாகி விட்டது.

ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்தில்தான் இருக்கிறது இராணுவம். காரணம், விடுதலைப் புலிகள் காட்டி வரும் கடும் எதிர்ப்பு.

ஆமை வேக நகர்வு

சிறிலங்கா ராணுவத்தின் முன்னேற்றம் ஒரு ஆமையின் தினசரி நகர்வை விட மெதுவாக உள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு 500 மீற்றர் அளவுக்குத்தான் இராணுவம் முன்னேறி வருகிறதாம். அந்த அளவுக்கு புலிகள் கடும் எதிர் தாக்குதலை தொடுத்து தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர் இராணுவத்தினரை.

விடுதலைப் புலிகள் தற்போது 21 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுருக்கப்பட்டு விட்டதாக இராணுவம் கூறுகிறது. ஆனால் அந்த பரப்பளவுக்குள் ஊடுருவ முடியாமல் இராணுவம் திணறிக் கொண்டிருக்கிறதாம்.

விடுதலைப் புலிகளிடம் தற்போது 500 வீரர்கள் மட்டுமே இருக்கலாம் என இராணுவம் கூறுகிறது. ஆனால் அந்த ஐநூறு பேரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அதை சமாளிக்க முடியவில்லையாம் இராணுவத்திற்கு.

இது விடுதலைப் புலிகளுக்கு வாழ்வா, சாவா போராட்டம். எனவேதான் கடுமையாக அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர் என்கிறார் புளொட் கட்சியின் தலைவரும், அரசியல்வாதியுமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன்.

விடுதலைப் புலிகளுடன் இருக்கும் கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களும் அவர்களுக்கு கவசம் போல இருப்பதால் சிறிலங்கா இராணுவத்தால் அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை.

இதுகுறித்து இராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், நாங்கள் மிக மிக மெதுவாகத்தான் முன்னேற முடிகிறது. கனரக ஆயுதங்களைப் பயன்படுத்த முடியவில்லை.

ஏராளமான மக்கள் விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதிகளில் இருப்பதால் வேகமாக முன்னேற முடியவில்லை. நினைத்தவுடன் தாக்குதல் நடத்தவோ, உள்ளே புகவோ முடியாது என்கிறார்.

கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் கெஹலிய ரம்புகெவல்ல, இறுதிக் கட்டத்தை எட்டி விட்டோம். விரைவில் புலிகளை ஒழித்து விடுவோம் என்று கூறியிருந்தார்.

ஆனால் தற்போது சிறிலங்கா இராணுவம் நகருகிற வேகத்தையும், புலிகள் நடத்தி வரும் எதிர்த் தாக்குதலையும் பார்த்தால் இந்தப் போருக்கு எப்போது முடிவு என்பதை யாராலும் கணிக்க முடியாது.

| | Read More »

இலங்கைக்கு நாடு கடத்தாமல் மனிதாபிமானம் காட்டுங்கள்: பிரிட்டிஷ் உள்துறை அமைச்சிடம் வேண்டுகோள்

இலங்கைக்கு நாடு கடத்தும் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன் மனிதாபிமானம் காட்டுமாறு பிரிட்டிஷ் பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியை ஒருவர் தனது இரு மாணவிகளுக்காக அந்நாட்டு உள்துறை அமைச்சு அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இலங்கைக்கு தாங்கள் பலவந்தமாகத் திருப்பி அனுப்பப்பட்டால் தாங்கள் எதிர்நோக்கும் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக பீதியை பிரிட்டனிலுள்ள இலங்கையைச் சேர்ந்த ஜோசப் குடும்பம் பாடசாலை தலைமை ஆசிரியையான ஜோ ஹக்ஸிடம் கூறியுள்ளனர்.

ஜீவிதா, நீரஜா ஆகிய இருவரும் ஆங்கிலேய தியாகிகள் பாடசாலையில் 2008 அக்டோபரில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்தனர். அவர்கள் மகிழ்ச்சியுடன் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் முன்மாதிரியான மாணவிகள். அசாதாரணமான முறையில் கடினமாகப் படிப்பார்கள். எப்போதும் சீராக உடையணிவார்கள். கற்பதில் மிக ஆர்வம் உடையவர்கள். சகபாடிகளிடம் நட்புறவைப்பேணி வருகின்றனர். ஆசிரியைகள் மத்தியில் அவர்கள் செல்வாக்குப் பெற்றவர்கள். அவர்களுக்கு கல்வித்துறையில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்று தலைமையாசிரியை கூறியுள்ளார்.

அங்கு கற்கும் மாணவிகளுக்கு பாடசாலை சீருடையும் கற்றல் உபகரணங்களையும் வழங்குவதுடன் ஆங்கிலம் கற்க அனுசரணையும் வழங்கி வருகின்ற உள்துறை அமைச்சு இந்த விடயத்தில் சட்டரீதியான பார்வையைச் செலுத்துகிறது. தந்தை கடத்தப்பட்டு வெள்ளைவானில் கொண்டு செல்லப்பட்டார் என நான் உதாரணமாக கூறுகிறேன் என்று ஹக்ஸ் கூறியுள்ளார்.

உள்துறை அமைச்சு இதற்கான ஆதாரம் எங்கே என்று பின்பு கேட்கும். குறுகியகால இடைவெளியில் குடும்பம் ஓடி வந்துவிட்டது. அதனால் ஆதாரத்தைப்பெற முடியவில்லை. அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சு கூறுகிறது. அங்கு தினமும் என்ற அடிப்படையில் மக்கள் கொல்லப்படடுகின்றனர் என்பது எமக்குத் தெரியும். இந்தச் சிறுமிகளும் தாயாரும் தாங்கள் இலங்கைக்குத் திருப்பியனுப்பப்பட்டால் கொல்லப்படுவார்கள். என்று அச்சப்படுகின்றனர்.

இந்தப் பெண்களின் நிலைமை, அவர்களின் இங்குள்ள நிலைமை என்பன குறித்து "மெயில்" (பத்திரிகை) வாசகர்கள் பரிசீலனை செய்யவேண்டும் என்று கேட்கிறோம். அவர்களை இங்கு வைத்திருக்க வேண்டியதற்கான சகலரினதும் ஆதரவு அவர்களுக்குத் தேவை என்றும் தலைமை ஆசிரியை "மெயில்" பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

| | Read More »

மன்மோகன் சிங் கொழும்புக்கு நாயரை அனுப்பியதன் நோக்கம், தமிழக வாக்கு வங்கியில் கண்வைத்தே?

தமிழ்நாட்டின் வாக்கு வங்கியில் கண்வைத்தே இலங்கைக்கு கடந்த வாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விசேட தூதுவராக தனது தலைமைச் செயலாளர் ரி.கே.ஏ.நாயரை அனுப்பியதாக இணையத்தளம் ஒன்று சுட்டிகாட்டியுள்ளது.

அத்துடன் நம்பகரமான அதிகாரப் பகிர்வை துரிதமாக முன்வைக்க வேண்டுமென்ற செய்தியையும் கொழும்புக்கு விடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் மார்ச் 25, 26 இல் தங்கியிருந்த நாயர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் அரசாங்கத்தின் சிரேஷ்ட தலைவர்களையும் சந்தித்திருந்தார். அனுராதபுரத்துக்கு சென்று பௌத்த கோவில்களையும் தரிசித்தார்.

நாயரின் இந்த விஜயத்தை கொழும்பும் டில்லியும் அதிகம் பிரபல்யப்படுத்தாமல் வைத்திருந்தன. ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவின் அழைப்பின் பேரில் நாயரின் விஜயம் இடம்பெற்றதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் குறிப்பிட்டிருந்தனர்.

இருநாடுகளுக்கும் இடையேயான பொது நிர்வாகம் தொடர்பான முன்னேற்றங்களை ஆய்வு செய்வதே இந்த வருகையின் நோக்கம் என்று சில தரப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, நேற்றுமுன்தினம் புதுடில்லியில் நிருபர்களுடனான சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்திருக்கும் இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், நாயரின் விஜயத்தை உறுதிப் படுத்தி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

"விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வருவதாக தென்படுவதாகவும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடமாகாணத்திற்கு நம்பகரமான அதிகாரப்பகிர்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இந்தியா இலங்கையை கேட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தையின்போது, சகல சிறுபான்மை சமூகங்களினதும் குறிப்பாக தமிழ் சமூகத்தினது தேவைகளை நிறைவேற்றுவதற்கான முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை பார்ப்பதற்குரிய படிமுறைகளை எடுக்கவேண்டிய தேவை குறித்து வலியுறுத்தியதாக மேனன் மேலும் கூறியுள்ளார்.

இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வே தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வாக அமையும் என்று இந்தியா நம்புவதாக மேனன் கூறியுள்ளார்.

இதேவேளை இந்திய விசேட தூவர் நாயர் அவர்களின் வருகையை இலங்கை அரசாங்கம் அம்பலப்படுத்தாத போதிலும், நாயர் கொழும்பில் தங்கியிருந்த காலப்பகுதியிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பினரை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சந்திப்புக்கு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

| | Read More »

நோர்வேயில் சீனத் தூதரகம் முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீன அரசாங்கம் வழங்கி வரும் ஆயுத உதவிகளை நிறுத்தக்கோரியும் தமிழீழ மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கக் கோரியும் நோர்வேயில் உள்ள சீனத் தூதரகம் முன்பாக நேற்று கவனயீர்ப்பு ஒன்றுகூடல் முன்னெடுக்கப்பட்டது.

நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் 3:00 மணி வரை இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.





கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்,

- சிறிலங்காவின் தமிழின அழிப்பினை நிறுத்து

- சிறிலங்கா அதிகார பீடத்திற்கான உதவி தமிழின அழிப்பிற்கு உடந்தையாக இருப்பதற்கு ஒப்பானது

- சிறிலங்காவிற்கான ஆயுத உதவிகளை நிறுத்து

- சிறிலங்கா இன அழிப்பு அரசுக்கு ஆதரவாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தாதே

போன்ற முழக்கங்களை எழுப்பியதோடு, பதாகைகளையும் தாங்கி நின்றனர்.

அத்தோடு, தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் கோரிக்கை மனு ஒன்றும் தூதரகத்திடம் வழங்கப்பட்டது.



அம்மனுவில்,

ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு மையத்தில் (UN Security Council) தமிழீழ மக்களின் நிலைமை தொடர்பான விவாதங்களை சீனா புறக்கணிக்காது ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அனைத்துலக மனித நேய உதவி நிறுவனங்களை வன்னிக்குள் அனுமதிக்கப்படுவதற்குரிய அழுத்தங்களை சிறிலங்காவிற்கு கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகள் உள்ளடங்கலாக சமகால நிலைமைகள் தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இதேவேளையில் நோர்வேயில் உள்ள ரஸ்யத் தூதரகம் முன்பாக நாளை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Drammens veien 74, 0244 Oslo என்ற முகவரியில் அமைந்துள்ள ரஸ்யத் தூதரகம் முன்பாக நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

| | Read More »