“வணங்கா மண்” கப்பலில் சென்றோர் தமிழ்நாட்டில் உள்நுழைய அனுமதி மறுப்பு

“வணங்கா மண்” கப்பலில் சென்ற போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் உறுப்பினரும், ஐஸ்லாந்து குடியுரிமை உள்ளவருமான கிறிஸ்ஜன், மற்றும் பிரித்தானியக் குடியுரிமை பெற்றவரான உதயணன் ஆகியோரை தமிழ்நாட்டில் உள்நுழைய குடிவரவு அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து கப்பல் கப்ரன் அலி பேர்த்தெட், மற்றும் பணியாளர்களுடன் இவர்கள் இருவரும். கல்கத்தா துறைமுகத்திற்குச் செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சென்னை சென்ற “வணங்கா மண்” கப்பலை இந்திய காவல்துறையினர், புலனாய்வுப் பிரிவினர், குடிவரவு அதிகாரிகள், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஆகியோர் மோப்ப நாய்கள் சகிதம் சோதனையிட்டு, கடும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அழுத்தம், மற்றும் ஒரு சில தமிழ்நாடு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் காரணமாகவே, “வணங்கா மண்” கப்பல் பொருள்களை ஏற்றுக்கொள்ள இந்திய அரசு சம்மதம் தெரிவித்திருந்தது.

வன்னியில் பல்லாயிரக் கணக்கானோர் படுகொலை - பேராசிரியர் பியரே பியுடெற்

வன்னியில் இறுதிக்கட்டப் போரில் தமிழ் மக்கள் பாரிய அளவில் இன அழிப்புச் செய்யப்பட்டுள்ளதாக, கனடா கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் பியரே பியுடெற் தெரிவித்துள்ளார்.

உலக அரசியல், மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாடு என்பவற்றை ஒப்பிட்டு ஆய்வுப் பத்தி எழுதியுள்ள இவர், உலகில் இடம்பெறும் போர்களில், அனைத்துலகப் போரியல் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை எனவும், ஐக்கிய நாடுகள் சாசனத்திற்கு முரணான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

வன்னியில் இறுதிக்கப்பட்டப் போரில் பல்லாயிரக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகக் கூறும் இவர், வான்வழி வானூர்தித் தாக்குதலால் மட்டுமன்றி, கண்ணில் பட்ட மக்களை தரைப்படையினர் சுட்டுக் கொன்றதன் ஊடாகவும், இன அழிப்புச் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றார்.

கனடா கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த சமூக அறிவியல் பேராசிரியரான பியரே பியுடெற், ஓல்ரனேரிவ்ஸ் (Alternatives) என்ற அரச சார்பற்ற மனித நேய அமைப்பின் நிறுவனராக இருப்பதுடன், அனைத்துலக ஒருங்கிணைந்த சமூக அமைப்பிலும் அங்கம் வகித்து வருகின்றார்.