சிறிலங்காவிற்கு ஆயுதங்கள் கொண்டு சென்ற வாகனங்களை தாக்கிய தமிழுணர்வாளர்கள் இராமகிருட்டிணன் லெட்சுமணன் விடுதலை

ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ஆயுத தளவாட வாகனங்களை வழி மறித்து மறியல் செய்ததற்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழக பெரம்பளூர் மாவட்டப் பொறுப்பாளர் லட்சுமணனும் இன்று விடுதலை ஆனார்கள்.

கோவை நடுவண் சிறையிலிருந்த அவர்களை இன்று காலை (01.08.2009) பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி தலைமையில் தமிழுணர்வாளர்கள் பலர் சிறை வாயிலில் திரண்டிருந்து எழுச்சியோடு வரவேற்றார்கள்.

சிறையிலிருந்து விடுதலை ஆன இருவரும் கோவை காந்திபுரத்தில் இருந்த தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பெரியார் படிப்பகம் சென்றனர்.

கட்சி அமைப்பு வேறுபாடின்றி அனைத்து தமிழுணர்வாளர்களும் சிறை வாயிலில் திரண்டிருந்தது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் அவர்கள் ஈழத்துப்போராளிகளுக்கு உதவியதாக ஏற்கெனவே மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தவர்.

pdk_01082009001

pdk_01082009002

pdk_01082009003

pdk_0108200904

pdk_01082009005

pdk_01082009006

pdk_01082009007

pdk_01082009008

pdk_01082009009

pdk_01082009010

pdk_01082009011

pdk_01082009012

pdk_01082009013

| | Read More »

“போராட்டம் முடிவுக்கு வரவில்லை, போராட்ட வடிவத்தையே மாற்றியுள்ளோம்”: ‘த வீக்’ வார இதழுக்கு பத்மநாதன் பேட்டி

s_pathmanathan
“எமது மக்களின் சுதந்திரப் போராட்டம் மாற்றமடையவில்லை. ‘நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது’ என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான போராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘த வீக்’ பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் அதனை நோக்கிய போராட்டத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியில் செல்வராஜா பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

“பிரபாகரன்தான் எமது தேசியத் தலைவர். தான் நம்பிக்கை வைத்த கொள்கைக்காக தனது வாழ்க்கை முழுவதையுமே வாழ்ந்தவர் அவர். ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமாக தமிழ் மக்களின் நிலத்தை மீட்டு எடுப்பதில் சமரசத்துக்கு இடம் இல்லாத நம்பிக்கை வைத்திருந்தவர் அவர். தனது நோக்கத்தில் இருந்து ஒருபோதுமே அவர் பின்வாங்கியதில்லை. சிறிலங்காப் படை இயந்திரத்தின் அனைத்துச் சவால்களையும் பிரபாகரன் எதிர்நோக்கினார். அனைத்துலகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்டமையால்தான் விடுதலைப் புலிகளின் படை பலத்தை சிறிலங்காப் படையால் முறியடிக்க முடிந்தது.

அரச தலைவர்களும், படை ஜெனரல்களும் மாற்றமடைந்தபோது, மிகவும் குழப்பமான நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு அவர் தலைமை தாங்கினார். அவர் தனது தாயகத்தில் இருந்துகொண்டே இந்த போரை நடத்தினார். இது ஒரு தற்காப்பு போராகவே இருந்தது. அவர் தமிழர் தாயகத்துக்கு வெளியே போரை கொண்டுசெல்லவோ அல்லது அப்பாவிப் பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாகச் செய்யவோ இல்லை. கொள்கையுடைய ஒரு மனிதராக அவர் இருந்தார்.

தனது இறுதி மூச்சுவரையில் தமிழ் மக்களின் நலன்களிலேயே அவர் கவனமாக இருந்தார். போர் அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அனைத்துலக அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் ஒரு செயல்திறன் மிக்க படையையும் நடைமுறை ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றையும், நடைமுறை ரீதியான தமிழீழ அரசு ஒன்றையும் அவர் உருவாக்கியிருந்தார்.

சிறிலங்கா அரசு சொல்வது உண்மை என எடுத்துக்கொண்டால், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழீழப் போராட்டத்துக்கும் என்ன நடைபெற்றிருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்கள்? பலர் சொல்வதைப் போல ஈழக் கனவு முடிவுக்கு வந்துவிட்டதா?

1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை என்ற கருத்துக்கு மக்களின் ஆணை கிடைத்தது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் தமிழர்களின் போராட்டத்தில் மாற்றம் ஏற்படப்போவதில்லை.

விடுதலைப் புலிகள் படை ரீதியான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர் என்பது உண்மைதான். 10 ஆயிரத்துக்கும் அதிகமான எமது போராளிகள் சிறிலங்கா அதிகாரிகளினால் அனைத்துலக விதிமுறைகளுக்கு எதிராகத் தடுத்துவைக்கப்படடுள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால் தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பானது நிலைமைகளுக்கு இசைவாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு. புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன், வன்முறையற்ற ஒரு பாதையிலேயே நாம் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தில் எமது போராட்டம் அரசியல் வழிகளிலேயே முன்னெடுக்கப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய அமைப்பாக தொடங்கப்பட்ட போதிலும் இப்போது ஒரு அனைத்துலகப் பிரசன்னத்தை அது கொண்டுள்ளது. இதனை ஒரு அனைத்துலக அமைப்பாக மாற்றியமைத்து அதன் மூலமாக சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.

இதனை ஒரு தோல்வி என நீங்கள் கருதுகின்றீர்களா? ஒரு பாரம்பரிய படை என்ற நிலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டீர்களா?

நான் முதலில் குறிப்பிட்டது போல, நிச்சயமாக நாம் படைத்துறை ரீதியாக பின்னடைவு ஒன்றைச் சந்தித்துள்ளோம். நாம் இப்போது அனைத்துத் தமிழர்களும், அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதமான அரசியல் பாதை ஒன்றையே தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் அனைத்துலக சமூகம் செய்ய வேண்டியது என்ன?

30 வருடங்களுக்கு முன்னர் என்ன காரணத்துக்காக நாம் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினோமோ அது இன்று வரையில் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இன்றும் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்களாக இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். கடந்த சில மாத காலமாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டபோது அனைத்துலக சமூகம் மெளனமாகவே இருந்தது.

ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அது தவறிவிட்டது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற அது தவறிவிட்டது. தற்போது சிறிலங்காப் படையினரால் கொடூரமாக படை மயப்படுத்தப்பட்ட முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா அரசின் மீது எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்க முடியாத நிலையில் அனைத்துலக சமூகம் உள்ளது.

இந்த அப்பாவித் தமிழர்கள் மீது தமக்குள்ள அக்கறையை அனைத்துலக சமூகம் இப்போது வெளிப்படுத்துவதுடன், அவர்களைப் பாதுகாப்பதில் தமக்குள்ள அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும். இதுதான் இப்போதுள்ள அவசரத் தேவை.

| | Read More »

தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய தமிழ்தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கே வாக்களியுங்கள்

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் உரிமையையும் நேர்மையுடன் வென்றெடுக்கக்கூடிய தமிழர்களின் சக்தியாய் தமிழர்களின் மாபெரும் பலமாய் இருக்கக்கூடிய ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே என்பதை அனைத்துலக சமூகமும் பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஏன் இலங்கை ஜனாதிபதியும் புரிந்துகொண்டுள்ள நிலையில் தமிழர்களின் ஒற்றுமையே பலம் என்பதை மீண்டும் உறுதியுடன் நிரூபிக்கும் களமாக யாழ் மாநகர சபை தேர்தலிலும் வவுனியா நகர சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து நேற்று வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை வருமாறு:


செல்வம் அடைக்கலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
வன்னித் தேர்தல் மாவட்டம்
31-07-2009

ஊடக அறிக்கை

தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அபிலாசைகளையும் உரிமையையும் நேர்மையுடன் வென்றெடுக்கக்கூடிய தமிழர்களின் சக்தியாய் தமிழர்களின் மாபெரும் பலமாய் இருக்கக்கூடிய ஒரேயொரு கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே என்பதை அனைத்துலக சமூகமும் பிராந்திய வல்லரசான இந்தியாவும் ஏன் இலங்கை ஜனாதிபதியும் புரிந்துகொண்டுள்ள நிலையில் தமிழர்களின் ஒற்றுமையே பலம் என்பதை மீண்டும் உறுதியுடன் நிரூபிக்கும் களமாக யாழ் மாநகர சபை தேர்தலிலும் வவுனியா நகர சபை தேர்தலிலும் தமிழ் மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு முதன்மை பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் யாழ்ப்பாண மாநகர சபை வவுனியா மாநகர சபை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

வரலாறு காணாத பேரவலத்தை சந்தித்த வன்னி வாழ் மக்கள் இடம்பெயர்ந்து வவுனியாவில் மூன்று லட்சம் மக்கள் முள்ளுக்கம்பிவதைமுகாமில் பரிதாபகர வாழ்க்கையை நோக்கி மரண பீதியுடன் உள்ள இவ்வேளையில் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்தும் முயற்சியை உடனடியாக மேற்கொள்ளாமல் யாழ்ப்பாண மாநகர சபை தேர்தலையும் வவுனியா நகரசபை தேர்தலையும் சிறிலங்கா அரசு திட்டமிட்டு திணித்துள்ளது.

திணிக்கப்பட்ட தேர்தலில் வலிந்து போட்டியிட வேண்டிய காலத்தின் தேவயை கருத்தில்கொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினராகிய நாமும் இத்தேர்தலில் போட்டியிட தீர்மானித்தோம்.

தமிழ்மக்கள் தமிழ் தேசிய கொள்கையிலிருந்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகிவிட்டார்கள் என்று தப்புக்கணக்கு போடும் சிங்கள தேசத்தின் முத்திரையை கிளித்தெறியும் அரிய வாய்ப்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பு இந்த தேர்தலை கருதுகிறது.

கடந்த 61 வருடங்களான தமிழினத்தின் உரிமைப்போர் அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் முன்னெடுத்த போதெல்லாம் அதனை திட்டமிட்டு உலக வல்லரசுகளின் ஆதரவுடன் தமிழர்களின் உணர்வுகளை அடக்கிய சிங்கள தேசம் பேச்சுவார்த்தைகள் மூலம் நிரந்தர தீர்வுக்காக பல சந்தர்ப்பங்களின் தமிழ் தலைமை முயன்ற வேளையில் எல்லாம் அதனை ஏற்றுக்கொள்ளவோ தமிழனத்துக்கு தீர்வு வழங்கவோ முன்வரவில்லை.

இன்னல்கள் இடர்கள் துன்பங்கள் சோகங்கள் என எமது வாழ்வு தொடரும் இவ்வேளையிலும் தமிழினம் தன்மானரத்தை இழந்து சோரம் போகாமல் சுதந்திர தாகம் கிடைக்கும் இறுதி நேரம்வரை பற்றுறுதியுடன் அரசியல் போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய வல்லமையும் துணியும் அரசியல் நேர்மையும் தமிழ் தேசிய கூட்டமைக்கு மட்டுமே உள்ளது என்பதனை நிரூபித்து எமது கரங்களை பலப்படுத்த உரிமையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்துக்கு வாக்களிக்கும்படியும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

செல்வம் அடைக்கலநாதன்
பாராளுமன்ற உறுப்பினர்
ரெலோ அமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர்
வன்னி மாவட்டம்
ரெலோ அமைப்பின் தலைவர்

| | Read More »