யாழில் தொடரும் பயங்கரம் – தமிழ் இனத்தை முற்றாக துடைத்தழிக்கத் திட்டம்?

| |

disappearednew

சிறீலங்காவின் வடபகுதியில் உள்ள யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று வாரங்களில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் பகல் வேளையில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்தி, அங்கு படுகொலைகளை மேற்கொண்டு சிங்களமயப்படுத்தல்களை மேற்கொள்ளும் திட்டத்தை சிறீலங்கா அரசு முன்னெடுத்துவருகின்றது.

சிறீலங்கா அரசின் இந்த திட்டத்தை ஆசியாவின் நோபல் பரிசு என அழைக்கப்படும் குஷி பரிசைப் பெற்ற யாழ் மாவட்ட கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் மகிந்தா கத்துறுசிங்கா, யாழ் அரச அதிபர் மற்றும் ஈ.பி.டி.பி துணைஇராணுவக்குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மூன்று வாரங்களில் சங்கானையில் இந்து ஆலயத்தின் பிரதம குருக்கள், உருப்பிராய் பகுதியில் உதவிக் கல்விப் பணிப்பாளர், சாவக்கச்சேரிப் பகுதியில் இளம் வர்த்தகர் உட்பட மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று (30) உரும்பிராய் பகுதியில் சண்முகநாதன் விக்னேஸ்வரன் (30) என்ற இளைஞர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

தனது கணவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ள விக்னேஸ்வரனின் மனைவி, துவிச்சக்கர வண்டியில் சென்ற தனது கணவரை வானில் பின்தொடர்ந்து வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவர் கடத்தப்பட்டதை ஒரு வயோதிபர் நேரில் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவ்வாறான கடத்தல் நடைபெறவில்லை எனவும், விடுதலைப்புலிகள் இல்லாதநிலையில் கடத்தல்கள் நடைபெறுவதில்லை எனவும் விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்த முயன்ற ஹத்துறுசிங்கா, பின்னர் சாட்சியங்கள் உள்ளதை அறிந்ததும், அது தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை நடத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் உத்தரவுக்கு அமைய 2007 – 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஈ.பி.டி.பியினர் மேற்கொண்ட பல நூறு படுகொலைகள் போன்றதொரு சூழ்நிலை தற்போது யாழில் தோன்றியுள்ளதாக யாழ் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பெரும் அச்சத்தில் வாழும் யாழ் மக்கள் தமது பிள்ளைகளை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்புவதற்கு முயன்று வருகின்றனர்.

இந்திய பாதுகாப்புச் செயலாளர் பிரதீப்குமாரின் சிறீலங்கா பயணத்தின் பின்னர் யாழ் குடாநாடு மீதான அரச பயங்கரவாதம் தீவிரமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

வடபகுதியில் இருந்து ஐ.நாவின் அமைப்புக்களையும், அனைத்துலக செஞ்சிலுவைச்சங்கத்தையும் வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுத்துவந்த இந்தியா தற்போது அங்கு படுகொலைகளை ஊக்குவித்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் வருடம் யாழ் மாவட்டத்தில் பல நூறு தமிழ் மக்கள் கடத்தப்படலாம் அல்லது படுகொலை செய்யப்படலாம் என மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

செய்தித் தொகுப்பு: ஈழம் ஈ நியூஸ்.

Posted by எல்லாளன் on 5:16 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0. Feel free to leave a response