
கடவுள் என்றொரு சக்தி உண்டா இல்லையா என்ற விவாதம் யுகங்கள் கடந்தும் இன்றுவரை தொடர்கதையாகி வந்தாலும் அதைவிட பன்மடங்கு தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது இருப்புத் தொடர்பாக வாதப் பிரதி வாதங்கள் இடம் பெற்றுவருகின்றன.
2009 மே 18ம் திகதிக்கு பின்னரான இன்றுவரையான காலப்பகுதியில் தேசியத் தலைவரது இருப்புப் பற்றிய தேடல் உலகத்தமிழர்களிடம் அதிகரித்தவண்ணமே உள்ளது. இடைப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா இந்திய உளவுத்துறையினரால் புதுப்புதுக் கதைகள் உருவாக்ப்பட்டு உலகத் தமிழர்களை பிளவுபடுத்தவும் சோர்வடையச் செய்யவும் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. தற்போதும் தொடர்ந்தும் அவ்வாறான முயற்சிகளில் சிறிலங்கா இந்தியப் புலனாய்வுத்துறையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடர்களை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர் நின்றாலும் மாவீரர்கள் காட்டிச் சென்ற பாதையிலும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது நேரிய வழிகாட்டுதலிலும் உலகத் தமிழர்களாகிய நாம் வழிநடப்போம் என மீண்டும் முரசறைந்து லண்டன் மாநகரில் எழுச்சிக் கோலம் பூண்டு தமிழீழ விடுதலைப்பயணத்தை உரமாக்கியுள்ளனர் லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள்

ஒருகல்லில் இரண்டு மாங்காய்கள் வீழ்த்தலாம் என தப்புக்கணக்குப் போட்டு லண்டன் பயணமான கொலைவெறியன் மகிந்தவை ஓட ஓட விரட்டியடித்த லண்டன்வாழ் ஈழத்தமிழர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எமக்கான விடுதலைப்பயணத்தில் நாம் போராடுவதற்கு எமக்கு யாரும் பாராட்டுப்பத்திரம் வாசிக்கத்தேவையில்லை.
இருப்பினும் தமிழினத்தை வீழ்த்த எதிரிகளுடனும் துரோகிகளுடனும் கைகோர்த்து எம்மின அழிவை வேடிக்கை பார்த்த உலக மகா கொள்ளைக் கூட்டத் தலைவர்களுக்கெல்லாம் பாராட்டுப்பத்திரம் வாசிக்கும் எமது புலம்பெயர் அமைப்புக்கள் குழுக்கள் சங்கங்கள் வாய்மூடி மௌனித்திருப்பது வேதனை அளிக்கின்றது.
என்ன நோக்கத்திற்காக எமது விடுதலைப் போராட்டத்தை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு உலக பிராந்திய வல்லரசுகள் சிங்களத்துடன் சேர்ந்து முள்ளிவாய்காலில் கொலைவெறியாட்டம் நடத்தினவோ அதனை வெளிப்படுத்தும் விதமாக சிறிலங்காவிற்கு அடுத்தடுத்து விரையும் தூதுக் குழுக்களும் உயர்மட்டக் குழுவினரும் இராணுவ அதிகாரிகள் கொண்ட குழுவினரதும் வருகை அமைந்துள்ளது. அதைவிட சிறிலங்காவின் துறைமுகங்களை நிரப்பும் பிராந்திய சர்வதேச வல்லரசுகளின் போர்க்கப்பல்களின் அணிவகுப்பும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த வகையில் சிங்களத்திற்கு தடையற்ற ஆயுத உதவிவழங்கி தமிழின அழிப்பிற்கு பெரும் துணைபுரிந்த நாடுகளில் ஒன்றான பாக்கித்தானின் அதிபரது வருகை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் திடீர் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தலைமையிலான குழு ஒன்று கொழும்பிற்கு அதிரடிப் பயணம் மேற்கொண்டது.
வழக்கம் போன்று தமிழக கருணாக்களின் அடிவருடி ஊடகங்கள் ஈழத்தமிழர் நலன்கள் தொடர்பான பயணமாக சித்தரித்தாலும் தான்தோன்றித்தனமாக செயற்பட்டுவரும் மகிந்தவை மிரட்டும் விதமாகவே அமைந்திருந்தது எனலாம். தனது பகைதேசமாகக் கருதும் பாக்கித்தானுடன் எவ்வித உடன்பாடுகளும் செய்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தவே இந்தப்பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதனை உறுதிப்படுத்துவது போன்றே சிறிலங்கா பாதுகாப்புத்துறைச் செயலாளரும் மகிந்த ராசபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராசபக்சவின் அதிரடி மறுப்பறிக்கை அமைந்திருந்தது. பாக்கித்தான் ஊடகங்கள் சிறிலங்காவுடன் பாக்கித்தான் பாதுகாப்பு உடன்படிக்கைகள் ஏற்படுத்தியுள்ளதாக வெளியிட்டிருந்த செய்திகளை மறுத்தே கோத்தபாயவின் இந்த பதிலறிக்கை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாக்கித்தானுடன் எவ்வித உடன்படிக்கைகளையும் தாம் மேற்கொள்ளவில்லையென அலறியடித்துக் கொண்டு கோத்தபாய அறிக்கை விட்டதன் பின்னணி இந்தியாவை சமாதானப்படுத்தவே என்பது வெளிப்படையானது. இவ்வாறு திரிசங்கு நிலையில் தத்தளித்த ராசபக்ச போட்ட திட்டம்தான் ஒருகல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் லண்டன் பயணமாகும்.
சிறிலங்கா வருகைதரும் பாக்கித்தான் அதிபருடனான சந்திப்பைத் தவிர்பது முதல் திட்டம். தமிழீழ விடுதலைப்புலிகளை சிறிலங்காவில் இருந்து முழுதாகஅழித்துவிட்டேன் என்று மார்தட்டி சொல்லும் சிங்கள அரசு புலம்பெயர் தேசங்களில் வலுவாக இருக்கும் கட்டமைப்பை கண்டு கதிகலங்கிவருகின்றது.
இதனையும் சிதைத்து பலவீனப்படுத்துவதற்கு தலைகீழாக நின்று முயன்று வருகின்றவேளை லண்டன் ஒக்த்போட் பல்பலைக்கழக மாணவர்மன்றத்தில் உரையாற்ற களம் கிடைத்தால் சும்மாவிட்டு விடுவார்களா?
போர்குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தினால் குறித்த நிகழ்வை முன்னர் தவிர்த்திருந்த சிங்களத்திற்கு அதன் சின்னத்தனமான புத்தி கொடுத்த உத்தேசமான மதிப்பீடே லண்டன் செல்லத் தூண்டியது.
தேசியத் தலைமையின் வெளிப்பாடு அற்றநிலையில் புலம்பெயர் தேசங்களில் தோற்றம் பெற்றுவரும் பல குழுக்களினால் ஏற்படும் குழப்பநிலை என்பவற்றால் புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள் பிளவுபட்டுவிட்டார்கள் என எதிரிகளும் துரோகிகளும் நப்பாசை கொண்டிருந்தவேளை வரலாறு காணாதவகையில் எழுச்சிக் கோலம் கொண்டு இந்த ஆண்டும் மாவீரர் நாளை அனுட்டித்திருப்பது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

குறிப்பாக லண்டனில் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் போர்கோலம் பூண்டு மாவீரர்நாள் நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை சிங்களத்தை கலங்கடித்திருந்த வேளை அதன் சின்னத்தனமான புத்தி வேறுவிதமாக யோசித்தது. கடும் குளிர் தொடர்ச்சியான வேலைக்கும் மத்தியில் இவ்வளவுபேர் ஒன்று கூடி கலைந்திருக்கின்றார்கள் அடுத்தடுத்த நாட்களில் மீண்டும் வீதிக்கு வருவதற்கு வாய்புகள் குறைவாகவே இருக்கும் எனவே இதுதான் சரியான தருணம் என கணக்குப்போட்டது சிங்களத்தின் சின்னப் புத்தி.
இயல்பாக அதுவே உண்மையும் கூட. புலம்பெயர் தேசங்களில் தொடர்ச்சியாக வேலைக்கு செல்லவேண்டிய சூழலில் மாவீரர் நாள் நிகழ்விற்காக ஓரு சில நாட்கள் எம்மவர்கள் விடுப்பு எடுப்பது வழமை. அவ்வாறு ஒருசில நாள் விடுப்பு எடுத்ததனால் உடனடியாக அடுத்தடுத்த தினங்களில் விடுப்பு எடுப்பது முடியாத காரியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இவற்றை கணக்குப்போட்டு தமிழகத்தில் ஈழ ஆதரவு உணர்வுத்தளத்தை சிதைப்பதில் பெரும்பங்காற்றிய அம்சா தலைமையிலான குழுவினரது ஏற்பாட்டில் லண்டன் பயணமாக கொலைவறியன் மகிந்த ராசபக்ச முடிவெடுத்தது இரண்டாவது திட்டமாகும்.
லண்டன் பயணத்தின் மூலம் தமிழர் எழுச்சிக்குப் போட்டிக்களமாக ஒக்த்போட் பல்கலைக்கழக மாணவர் மன்றத்தை பயண்படுத்தி தனது வீரப்பிரதாப உரையை ஆற்றலாம் எனவும் அதன்போது ஈழத்தமிழர்களது எதிர்ப்பும் வலுவாக இருக்க வாய்ப்பில்லை என மனப்பால் குடித்துக் கொண்டு லண்டனில் கால்வைத்தான் மாபாதகன் மகிந்த ராசபக்ச.
சுழன்றடித்து துரத்திய ஓயாத அலைகள்…
லண்டன் நோக்கி ராசப்க்ச விமானம் ஏறிவிட்டதாக நம்பகரமான தகவல்கள் கிடைத்தவுடன் சிலிர்த்தெழுந்த ஈழத்தமிழர்கள் கொலைவெறியன் வந்திறங்கும் கீத்று விமானநிலையத்தை திடீர் முற்றுகைக்குள் கொண்டுவந்தனர். கீத்று விமான நிலைய பயணிகள் வரவேற்புப் பகுதியில் ஒன்று பத்து நூறெனத் திரளத்தொடங்கிய எம்மவர்கள் திடீரென ஆயிரக்கணக்கில் திரண்டனர்.
போர்க்குற்றவாளி ராசபக்சவை கைது செய்யுமாறு எம்மவர்கள் எழுப்பிய கோசம் விமான நிலையப்பகுதியெங்கும் எதிரொலித்தது. இதனால் ஏற்பட்ட பதற்றமான சூழலை அடுத்து லண்டன் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தாலும் எமது மக்களது நியாயபூர்வமான போராட்டத்திற்கு வழியேற்படுத்தி தமது காவல்கடமையை செய்திருந்தமைக்கு லண்டன் காவல்துறையை அடுத்ததாக பாராட்டியே ஆகவேண்டும். (லண்டனில் என்ன கருணாநிதியின் ஆட்சியா நடைபெறுகிறது…? ஈனத்தனமாக காவல்துறையை ஏவிவிட்டு அரசபயங்கரவாதம் நிகழ்த்துவதற்கு)
கொலைவெறியன் மகிந்த ராசபக்சவை சுமந்துவந்த விமானம் தரையிறங்கிய நொடிமுதல் அங்குதிரண்டிருந்த ஈழத்தமிழர்களது கையே ஓங்கியிருந்தது. ஆணவத்தோடு லண்டன் வந்த ராசபக்சவிற்கு லண்டன் மண்ணில் கால்வைக்கும் முன்னே அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்பட்டது.
லண்டன் அரசதரப்பு பிரதிநிதிகள் சிங்கள எடுபிடிகள் என திரண்டுவந்து தன்னை வரவேற்பார்கள் என்ற நினைப்பில் இருந்த ராசபக்சவிற்கு விமானப்படிக்கட்டைவிட்டு இறங்கியது முதல் திகில் அனுபவமே ஏற்பட்டிருந்தது.
லண்டன் காவல்துறையினரது ஏற்பாட்டில் சிறப்பு வாகனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு விமான நிலைய ஓடுபாதையில் வைத்தே அவசர அவசரமாக ராசபக்சவை ஏற்றிக் கொண்டு ரகசிய சுரங்கப்பாதை வழியாக அழைத்துச் சென்றனர். தன்னைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று சுதாரித்துக் கொள்வதற்கு முன்னரே தமிழர்கள் ஓயாத அலையாக சுழன்றடித்து சிங்களத்தின் சனாதிபதியை சிங்கள மண்ணிற்கே விரட்டியடித்தனர்.

விடுதலை வேட்கையை நெஞ்சில் சுமந்து போராட்டக் களம் புகுந்த தமிழர்கள் உறையவைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாது துரிதகதியில் போராட்டக்களத்திற்கு தயாராகியதுடன் குறுகிய நேர இடைவெளியில் களம் மாற்றமடைந்த போதிலும் அதற்கும் சளைக்காமல் மகிந்தாவை விரட்டி விரட்டி பழிதீர்தனர்.
இப்போது தெரிகிறதா…? மக்கள் பாதுகாப்பு வளையம் என்று உலக நாடுகளை ஏமாற்றுவதற்காக சில பகுதிகளை அறிவித்து எமது மக்களை வரவைத்து கொன்று குவித்து கொலைக்களமாக்கினீரே… நினைவிருக்கின்றதா... மகிந்தரே?
உடையார்கட்டு.. சுதந்திரபுரம்.. வள்ளிபுனம்.. தேவிபுரம்.. புதுக்குடியிருப்பு.. மாத்தளன்.. என எமது மக்களை வஞ்சகமாக ஓவ்வோரிடமாக வரவைத்து கொன்று குவித்தீர்களே.. இன்று அந்த வலி என்னவென்று எம்மவர்கள் உமக்குப் புரியவைத்துள்ளனர்.
காத்திருந்து கதைமுடித்த வரலாற்று நிகழ்வுகளிற்கு சிகரம் வைத்தது போல் லண்டனில் பாதுகாப்பு வளையங்களை உருவாக்கி விரட்டி விரட்டி பழிதீர்த்த நிகழ்வு அமைந்து விட்டது என்றால் மிகையில்லை.
ஒக்த்போட் பல்கலைக்கழக மாணவர் மன்ற நிகழ்வு நிறுத்தி வைக்கப்பட்டதாக உத்தியோக பூர்வமாக இறுதி நேரத்தில் அறிவிக்கப்பட்டவுடன் அங்கு திரண்டிருந்த மக்கள் மகிந்த தங்கியிருந்த விடுதியை நோக்கி அணி அணியாக நடைபோட்டனர். சிறிது நேரத்தில் விடுதிமுன்பு பல்லாயிரம் பேர் திரண்டு முழக்கமிட்டவாறு கொட்டும் பனி மழையில் உறுதியுடன் நின்றதனை சன்னல்வழியே மகிந்த பார்த்திருந்தால் வேர்த்து விறுவிறுத்திருக்கும்.
இதுவரை நேரடியாக புலிகள் படையினை எதிர்கொள்ளாத மகிந்த லண்டன் வீதிகளில் அந்த புலிகள் கூட்டத்தை கண்டு அரன்டு போயிருப்பான். அங்கிருந்து சிறிலங்கா தூதரகத்திற்கு பிரத்தியேக வழியாக அழைத்து செல்லப்பட்ட மகிந்த திட்டமிட்ட நிகழ்வுகள் எதிலும் பங்குபற்றாது ஒருநாள் முன்னதாகவே ஈரல்குலையை கையில் பிடித்தவாறு சிங்கள தேசம் திரும்பிச் சென்றமை எமது மக்களது ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

அதிலும் குறிப்பாக சிங்களத்தை சினம் கொள்ளவைத்தது தமிழர் கைகளில் எந்தியிருந்த எமது தேசியக் கொடியான புலிக் கொடியைப் பார்த்தே. அந்த கோபத்தை லண்டன் காவல்துறை மீதும் அரசாங்கத்தின் மீதும் திருப்பி ஆறுதல் தேடிக்கொண்ட சிங்களத்திற்கு அதிலும் கிடைத்தது ஏமாற்றமே.
கட்டுரைகள் வாயிலாக மக்களிற்கு கருத்துக்களை கூறுகின்றோம் என கிளம்பியிருக்கும் சில அதிமேதாவிகளது கருத்தினை ஆமோதிப்பது போன்று புலம்பெயர் தேசங்களில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் ஊர்வலங்களில் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது படங்களையும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கொடியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் எமது தேசியக்(புலி) கொடியினையும் பயண்படுத்தக் கூடாது என நிகழ்வு ஒழுங்கமைப்பாளர்கள் வற்புறுத்திவரும் நிலையில் மக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்த இப்போராட்டத்தில்
தேசியக் கொடியை கையிலேந்தி "களமாடி பாடம் புகட்டியுள்ளனர்".அதைவிட ஒரு நாட்டின் அதிபரின் வருகையை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போராட்டத்தில் அதுவும் முன்னறிவிப்பின்றி அனுமதிபெறாது திடீரென நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ தேசியக் கொடியுடன் எம்மவர்கள் போராட்டம் நடத்தியது தொடர்பாக லண்டன் காவல்துறை எதுவித நடவடிக்கையும் எடுக்காதிருந்தமையும் அதனை ஆமோதித்து லண்டன் அரசதரப்பு கருத்துத் தெரிவித்திருக்கின்றமையும் சிறந்த சூழலாகும்.
இந்த தேசியக் கொடிக்காக எத்தனை பேர் இரத்தம் சிந்தினார்கள் என்பது தற்போது புலம்பெயர் தேசங்களில் அதனை பயன்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருப்பவர்களுக்கும் நன்றாக தெரிந்திருக்கும்.

உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கென்று முகவரி கொடுத்தது எமது தேசியத் தலைவரது தலைமையிலான விடுதலைப்போராட்டமும் அதனடிப்படையில் மாவீரர்களது தியாகமுமாகும்.அதன் அடையாளமான தேசியக் கொடியை எக்காரணம் கொண்டும் நாம் புறந்தள்ளவோ தவிர்க்கவோ முடியாது. எமது உடலில் உயிர் நிலைபெற்றிருக்கும் வரைதான் எமது ஆட்டம் பாட்டம் எல்லாம்.
அந்த உயிர்பிரிந்து வெற்றுடலானால் அதற்கு மதிப்பே கிடையாது. அதுபோன்றே எமது தேசியக் கொடி எமது வாழ்வில் நீக்கமற நிலைத்துவிட்ட ஒன்று. அதனை தவிர்ப்பது சாத்தியமற்றதாகும்.தமிழகத்தில் முன்னர் மத்திய அமைச்சராக இருந்த அன்புமணி ராமதசு ஒருதடவை வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டு வந்தபோது தன்னை தமிழராக அடையாளப்படுத்திய போது நீங்கள் இலங்கைத் தமிழரா என அந்நாட்டுப் பிரதிநிதி வினவியதாக பின்னாலில் நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார். இந்திய மத்திய அமைச்சர் ஒருவர் தமிழராக இருந்ததால் அவரை இலங்கைத் தமிழராக அடையாளப் படுத்தப்பட்டதற்கு எமது போராட்டமே காரணமாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழர்கள் குண்டுச் சட்டிக்கள் குதிரை ஓட்டிச்கொண்டிருந்த காலம் மாறி வளர்ச்சியடைந்த நாடுகளை நோக்கி பயணித்து இன்று இலட்சாதிபதிகளாகவும் கோடீசுவரர்களாகவும் இருப்பதற்கும் தமிழர்கள் என்ற அடையாளம் அழுத்தமாக ஏற்படுவதற்கு எமது விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியே காரணமாகும் என்பதை யாராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
இந்த சர்வதேச அங்கீகாரத்தின் பின் நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட மானமறவர்களான யுகங்கள் கண்டிராத மாவீரர்களது ஒப்பற்ற ஈகமும் விடுதலைக்கு சாவிலும் வலிமைசேர்த்த இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட எமதருமை உறவுகளது தியாகமும் இருப்பதை உணர்ந்து கொண்டு
எமது தேசிய அடையாளம் ஆகிய தேசியக்(புலி) கொடியையும் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களது படங்களையும் கையிலேந்தி விடுதலைப் போரை முன்னெடுப்போம்.மலைபோல் மக்கள் சக்தி எமக்குப் பின்னால் இருக்கும் வரை எந்த புதிய சவால்களையும் எதிர்க்கத்தயார் என கூறிவந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் முள்ளிவாய்க்காலில் வைத்து எமது விடுதலைப் போராட்டத்தை புதிய பரிமாணத்திற்கு இட்டுச் சென்று உயிர்ப்புடன் இயங்கி தமிழீழத்தை மீட்டெடுப்பதற்கான இறுதி யுத்தத்திற்கு தயாராகி வருவதும் அந்த மகத்தான மக்கள் சக்தியை நம்பித்தான். அந்த நம்பிக்கைக்கு உயிர் கொடுத்து தலைவருடன் கரம்கோர்த்து தற்போது ஏற்பட்டுள்ள சிக்கலானதும் நெருக்கடியானதுமான புறச் சூழலை தவிடுபொடியாக்கி தமிழீழத்தை வென்றெடுப்போம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(01-01-2011)
ஈழ அதிர்வுகள் தொடர்பாக உங்கள் கருத்துக்களை தெரிவிக்க athirvalaikal@hotmail.com